புதிய மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி கேட்க உள்ளதாக தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் தடை இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சார விநியோக திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 3.03 லட்சம் கோடி மதிப்பிலான இது திட்டத்தை 2025 முதல் 26 ஆம் ஆண்டுக்குள் முடித்து கொடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு விரைவில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல், மின் வழித்தடம் அமைத்தல், மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்துதல், மின் இணைப்புகளில் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்துதல் போன்றவையாகும்.
இரண்டாவது பிரிவு ஊழியர்களுக்கு பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் செயல்படுத்தப்படும். இந்நிலையில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் திட்ட பணிகளை முடிப்பதற்கு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதியில் 60 சதவீதம் மானியமாக கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால் மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி கேட்க தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: “புதுப்பிக்கப்பட்ட மின் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். இதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை, இம்மாதத்திற்குள் தமிழக மின் வாரியம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.