காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்திற்கு வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தின் கீழ் தலா ஊராட்சி ஒன்றியத்தில் 100 பேர் வீதம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 500 பேருக்கு ஆடுகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள பெண்களாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின வகுப்பினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். நிலமற்ற வேளாண் பயனாளர்களாக இருக்க வேண்டும். சொந்தமாக ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்திருக்கக்கூடாது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பங்களை அருகிலுள்ள கால்நடை நிலையங்களில் பெற்று அதனைப் பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.