கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு நடுரோட்டில் வைத்து 3 பேரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அரவிந்தனை சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் ஆகாஷ், பிரசாந்த், அவருடைய சகோதரர் மணி உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ஆகாஷ், பிரசாத், மணி ஆகிய 3 பேரும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பாடிக்கு புறப்பட்டுள்ளனர். இது குறித்து அறிந்த அரவிந்தனின் தந்தை ரவி, சகோதரர்கள் விவேக், ராஜ் போன்றோர் குற்றவாளிகள் 3 பேரையும் அரிவாளுடன் சுற்றி வளைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ், மணி, பிரசாந்த் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் விடாமல் நடுரோட்டில் ஓட ஓட துரத்தி சென்று 3 பேரையும் வெட்டிவிட்டு ரவியும், அவரது மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் படுகாயமடைந்த ஆகாஷ், மணி, பிரசாந்த் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவி, விவேக், ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்