தனியார் பேருந்து பாலத்திற்கு அடியில் தேங்கிய நீரில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம், கவுண்டன்பாளையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என அனைவரும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே இருக்கும் லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீர் அதிகமாக தேங்கி நின்றுள்ளது.
இதனை பொருட்படுத்தாமல் தனியார் பேருந்து ஒன்று முன்னோக்கி சென்றதால் பேருந்துக்குள் தண்ணீர் ஏறியது. இதனால் பாலத்தின் நடுவில் பேருந்து நின்று விட்டது. ஓட்டுநர் முயற்சி செய்தும் பேருந்து இயக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் 12 பேர் வெளியே வந்துவிட்டனர். ஆனால் 8 பேரால் வெளியே வர இயலவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி 8 பேரையும் பத்திரமாக மீட்டனர்.