விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளரை தாக்கிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காவல்நிலையம் முன்பு திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓரசோலை அண்ணாநகர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். இவர் ஜக்கனாரை ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் பெரியசாமியும், தேவகியும் அண்ணா நகரில் இருக்கும் 150 குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் வசதி பெறுவது தொடர்பாக ஆலோசித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஜெஸ்டின், மனோ தீபன் ஆகியோர் பெரியசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் பெரியசாமியை 20 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி விட்டுள்ளனர். இதனால் காயமடைந்த பெரியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோதீபன் மற்றும் ஜெஸ்டினை கைது செய்துள்ளனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், பொருளாளர் மண்ணரசன் போன்றோரின் தலைமையில் உறவினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
அப்போது பெரியசாமி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமித்து சுவர் கட்டியவர்களை கண்டித்து போராடிய கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.