திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலமான திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானமானது நிர்வகித்து வருகிறது. இங்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வைரலாகி வந்தது. இதனை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் மிகுந்த அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தேவஸ்தானம் சார்பாக விளம்பரம் வெளியிடப்பட்டதாக பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
இந்த தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இதற்கு முன்பாக இதுபோன்று வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்புவதாக இருந்தால் முதலில் பத்திரிக்கை மற்றும் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அதை மட்டும் பொதுமக்கள் நம்பலாம். ஆகவே மற்ற பொய்யான விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்று விளம்பரங்கள் குறித்து தகவல் தெரிந்தால் மக்கள் உடனடியாக தேவஸ்தானத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலையில் கொட்டி தீர்த்த கன மழையால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது முதல் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 2-ம் மலைப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக வழக்கமாக 26-30 நிமிடங்கள் வரை ஆகும் பயணமானது 90 நிமிடங்கள் வரை அதிகரிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதனிடையில் தற்போது மலைப்பாதையை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.