பல ஓவியங்களை வரைந்து முதல்வர் முக.ஸ்டாலினிடம் காண்பித்த 8-ம் வகுப்பு மாணவியை கலெக்டர் பாராட்டினார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓவர்சேரி கிராமத்தில் சக்கரபாணி-புஷ்பா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற மகள் இருக்கிறார். இவர் ஆதிச்சபுரம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இதில் மாணவி ராகவி பள்ளிக்கு சென்று வந்து வீட்டில் இருக்கும் ஓய்வு நேரங்களில் பல வகையான ஓவியங்களை வரைந்து வந்தார். இந்த ஓவியங்களை வரைந்த மாணவியை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வந்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தங்களின் பகுதிக்கும் வருவதை அந்த மாணவி அறிந்துகொண்டார்.
இதனையடுத்து தான் வரைந்த ஓவியங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஓவியம் போன்றவற்றை முதல்வர் முக.ஸ்டாலினிடம் காண்பிக்க வேண்டும் என்று மாணவி எதிர்பார்த்து காத்திருந்தார். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தை மீறி மாணவி செல்ல முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் ஆதிச்சபுரம் பாலம் அருகே பிரதான சாலையில் நின்று முதலமைச்சரிடம் ஓவியத்தை காண்பிக்க வேண்டும் என்ற தவிப்புடன் மாணவி ராகவி காத்திருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு வந்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் மாணவி ஒருவர் எதோ கையில் வைத்திருப்பதை பார்த்து காரை நிறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து முக.ஸ்டாலின் அவர்கள் மாணவி ராகவி வைத்திருந்த ஓவியங்களை வாங்கிப் பார்த்து பாராட்டினார். அதன்பின் முதல்வர் முக.ஸ்டாலின் மாணவிக்கு கைகொடுத்து நலம் விசாரித்ததோடு, தேவையான உதவிகளை செய்வதாகவும் அறிவித்து சென்றார். இவ்வாறு தான் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவி ராகவியை பொதுமக்கள், சேவை சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் பாராட்டினர். இத்தகவலை அறிந்த மாவட்ட கலெக்டரான காயத்ரி கிருஷ்ணன் ராகவியை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாணவிக்கு தேவையான உதவிகளை செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.