கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கால்நடைகளில் ஏற்படும் உடல் வெப்ப நிலை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உடல் தாழ் வெப்ப நிலை ஏற்படுவதற்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் கால்நடைகள் இருப்பது முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடைகளில் சாதாரண உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு (96*F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதாலம்.
பொதுவாக, புதிதாக பிறந்த குட்டிகளும் இளங்கன்றுகளும் அதிகமாக உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு சில நேரங்களில் இறக்கவும் நேரிடுகிறது. மேலும் தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் இருப்பது, குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் ஈரமான தரை, பாதகமான சீதோஷண நிலையினால் போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காதது, ஈரமான மண் உடன் கூடிய இருப்பிடம் சரிவர நீர் வடியாத கொட்டகை ஆகியவை இதற்கான காரணங்கள் ஆகும்.
பராமரிப்பு முறைகள்:
கால்நடைகள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் இருந்தால், உடனடியாக அவற்றை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும்.
காய்ந்த துணி, சாக்கு அல்லது வைகோலை தரையில் பரப்பி அதன் மேல் படுக்க வைக்க வேண்டும்.
கொட்டகையில் தண்ணீர் தேங்கி இல்லாமலும் குளிர்ந்த காற்று வீசாதவாறும் பார்துக்கொள்ள வேண்டும்.
குடிப்பதற்கு சற்று சூடான தண்ணீரும் உரிய தீவனமும் கொடுக்க வேண்டும்.
உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சற்று சூடேற்றப்பட்ட குளுக்கோஸ் திரவத்தை இரத்த குழாய் வழியாக உடலுக்குள் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.