தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. தற்போது உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான அறிவிப்பு ஜனவரி 3வது வாரத்தில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவித்துவிட்டால் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியாது. இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்தது. மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விரைவாக வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.