15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் 2-வது வாரம் நடக்க இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது .இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் 2-வது வாரம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி முதல் வாரத்தில் ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியது.
ஆனால் புதிய அணியான ஆமதாபாத்தை வாங்கியுள்ள சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் மீது சூதாட்ட புகார் வைக்கப்பட்டுள்ளதால் இதனை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் .இதன்பிறகு 2 புதிய அணிகளும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக 3 வீரர்களை தங்கள் அணியில் வாங்கிக்கொள்ள 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும்.இதனால் ஜனவரி 2-வது வாரத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.