சென்னை திருவல்லிக்கேணியில் இன்ஸ்பெக்டருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக பயந்து பீதி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் இரவு பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி இடம்தான் கொடுப்பேன் என்று அந்த நபர் தெரிவித்தார். மேலும் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பணி முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல் உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தகவல் தெரிவித்த போது தனக்கு வந்த பார்சல் இல்லை என்று அவர் வாங்க மறுத்துவிட்டார். இதனால் அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டு வெடிகுண்டாக இருக்குமோ என்று எண்ணி வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து கலைவாணர் அரங்கம் பின்புறம் உள்ள மைதானத்தில் வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை பிரித்து பார்த்தனர்.
அப்போது வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. அது உண்மையிலேயே பரிசுதான். அதில் முந்திரி பருப்பு, பாதாம், திராட்சை மற்றும் சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தன. வெடிகுண்டு பார்சல் என்று பெரும் பீதியை ஏற்படுத்திய பார்சல் கடைசியில் பரிசு பார்சலாக இருந்து அனைவரின் நெஞ்சிலும் பால் வார்த்தது. இதை தொடர்ந்து அந்த பார்சலை கொண்டு வந்தவர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.