கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் அப்துல் மஜீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி புக்கிங் நிறுவனத்தில் எழுத்தராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு ஜெய்லானி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் அஸ்ரப் அலி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் திருடு போனது. அந்த இரு சக்கர வாகனத்தை அதே பகுதியில் வசிக்கும் நாசர், முகமது, ரியாஸ், ஆசித், அயூப், பிரகாஷ் ஆகியோர் தான் திருடி சென்றனர் என ஜெய்லானி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த நாசரும், அவரது நண்பர்களும் ஜெய்லானி மீது கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெய்லானி தனது தம்பியான முகமது அன்சர் அலி என்பவருடன் மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோடு காந்தி மைதானம் மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற நாசர், முகமது, ரியாஸ், ஆசித், அயூப், பிரகாஷ் ஆகியோர் எங்களை பற்றி நீ ஏன் பேசுகிறாய் என கூறி ஜெய்லானியை கற்கள் மற்றும் பாட்டிலால் சரமாரியாக அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த ஜெய்லானியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜெய்லானி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய 6 குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.