ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இருவரும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் வருடத்தில் சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்பு, விடுதலையடைந்து தனிநாடாக மாறிவிட்டது. கடந்த 2014 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை மீண்டும் ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
அதன்பின்பு அமெரிக்க அரசு, உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைக்க முயன்றது. இதனை ரஸ்யா கடுமையாக எதிர்த்தது. இதனிடையே ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக 1,75,000 ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்துள்ளதாகவும், அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த செயலுக்காக ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். எனினும், ரஷ்யா இதனை மறுத்துள்ளது. மேலும், உக்ரைன் அரசு தான் தங்களது படைகளை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜோபைடன் மற்றும் விளாடிமிர் புடின், இருவரும் இன்று காணொலிக் காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த பிரச்சினை தொடர்பில் விவாதம் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.