ரஷ்யா அனுமதி கோரும் சிறுவர்களுக்கான ஸ்புட்னிக் எம் தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற தடுப்பூசிகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, புதிதாக ஸ்புட்னிக் எம் என்ற தடுப்பூசியை 12 லிருந்து 17 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக ரஷ்யா தயாரித்திருக்கிறது. எனவே, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம், ரஷ்யா, தங்கள் தடுப்பூசிக்கு அனுமதி கோரியிருக்கிறது.
இதுகுறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி, கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களோடு அதிகமான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதன் மூலமாக எங்களுக்கு அதிக உற்பத்தி கிடைத்திருக்கிறது. எனவே, அந்நாட்டில், இளைஞர்கள் உட்பட அதிகமான உயிர்களை காக்க ஸ்புட்னிக் லைட் மற்றும் ஸ்புட்னிக் எம் தடுப்பூசிகளை வழங்க நாங்கள் தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால், அந்நாட்டில் சிறுவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் தடுப்பூசி இது தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.