தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததையடுத்து விவசாயம் செழிக்கும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்று மாலை கனமழை பெய்ததால் குறிஞ்சிநகர் முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.