நிச்சயதார்த்தம் முடிந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிளியனூர் கிராமத்தில் தங்கயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த சின்னத்தம்பி என்ற மகன் இருந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறையில் உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்திற்கு செலவழித்த 50,000 ரூபாய், தங்க சங்கிலி, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திரும்பத் தருமாறு அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர்.
அதைத் தராமல் பெண் வீட்டார் சின்னத்தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரை அலைய வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி குடும்பத்தினர் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சின்னத் தம்பியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சின்னத்தம்பி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.