மார்கழி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக, திருப்பாவை பாசுரம் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடியபடி சுவாமியை துயிலெழுப்ப கூடிய பூஜைகள் நடைபெறும். மேலும் மார்கழி மாதம் வரும் 16-ஆம் தேதி தொடங்குவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்பட்டு, சுவாமியை துயில் எழுப்பப்படவுள்ளது.
தொடர்ந்து மார்கழி மாதம் நிறைவு பெற்றபின், சுப்ரபாத சேவை நடைபெற உள்ளது. இதையடுத்து தினமும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில், மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கு ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.