குக் வித் கோமாளி அஸ்வின்குமார் இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின் குமார். இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “என்ன சொல்லப் போகிறாய்” எனும் திரைப்படத்தில் அஸ்வின்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அஸ்வின் குமார் கூறியதாவது, ரசிகர்களின் அன்பால் தான் நான் இங்கு வளர்ந்து நிற்கிறேன். மேலும் விஜய் தொலைக்காட்சி தான் என் வாழ்க்கையில் திருப்பத்தை தந்திருக்கிறது. ஒரு காமெடி நிகழ்ச்சி எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றுத் தரும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
எனவே உங்களின் அன்புக்கு ஏற்றார்போல் உரிய படத்தை கொடுக்க வேண்டும் என காத்திருந்தேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்றால் அது என்ன சொல்ல போகிறாய் மட்டுமே.
ஏனென்றால் இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் இக்கதையை அவ்வளவு சிறப்பாக கொண்டு செல்கிறார். எனவே இப்படத்தை நீங்களும் கண்டு கொண்டாடுவதை காண ஆவலாக இருப்பதாகவும் இப்படம் நிச்சயம் ஜெயிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.