செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் வீரமிக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவர் முள்ளக்காட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம் போல் வேல்முருகன் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் வேல்முருகன் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 ஸ்மார்ட் போன்கள் உள்பட 19 செல்போன்கள், 3 ஹெட்செட், 2 பவர் பேங் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வேல்முருகன் முள்ளக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.