ஆட்சியரின் காரை வழிமறித்து தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆட்சியரின் காரை தம்பதி வழிமறித்தனர். அதன் பிறகு அவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து ஆட்சியர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் அவர்கள் குருவிக்காரன் சாலையில் வசிக்கும் மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி என்பது தெரியவந்துள்ளது. மதுரையில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலின் கிளை சென்னையில் இருக்கிறது. அந்த கிளையில் என்னை தொழிலில் பங்குதாரராக இணைப்பதாக கூறி 24 லட்ச ரூபாய் வரை வாங்கியுள்ளனர். ஆனால் அந்த ஹோட்டலை திறக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது தகுந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தம்பதியினர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது.