கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வடக்கு ஆத்தூர் பேட்டை தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி செந்தில்குமாரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனையடுத்து செந்தில்குமாரின் செல்போன் நம்பரை வைத்து அவர் நாகை மாவட்டத்தில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக நாகப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல்கொடுக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில்குமார் காரில் கீழ்வேளூரை நோக்கி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் ரயில்வே கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அந்த காரில் இருந்த செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் செந்தில்குமார் கடந்த 2 மாதமாக தலைஞாயிறு அருகே காரியாப்பட்டினம் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் காவல்துறையினர் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ஆத்தூர் காவல்துறையினர் கீழ்வேளூருக்கு வந்து செந்தில்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.