தொழிலாளி வீட்டில் இருந்த 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவேதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுவேதாவும் அவரது கணவரும் தினமும் வேலைக்கு சென்று வருவதால் சுவேதா தனது 16½ பவுன் நகைகளை தந்தை சரவணனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து சரவணனும் நகைகளை தனது வீட்டின் பீரோவில் பூட்டி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி சரவணன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகைகள் எல்லாம் திருடு போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.