தனியார் பள்ளிக்கூடத்துக்கு தாலியுடன் வந்திருந்த மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 17 வயதுள்ள மாணவி தாலியுடன் வந்திருப்பதாக சமூக நலத்துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், அவருக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையில் பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவியை சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சமூக நலத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.