இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்பகுதியில் இருந்து கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மண்டபம் காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, யாசர் மவுலானா, கடலோர காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடலோர பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது வேதாளை அருகே உள்ள தென்னந்தோப்பு பகுதியில் இருந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்ததில் சுமார் 30க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளது. மேலும் 2 டன் எடையுள்ள இந்த கடல் அட்டைகள் சர்வதேச மதிப்பு ஒரு 1 ரூபாய்க்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.