மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவினை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். இந்நிலையில் வலசையூரில் வசிக்கும் மணிமேகலை என்ற பெண் மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மணிமேகலையிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிவிட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிமேகலை அயோத்தியாபட்டணம் பகுதியில் இருக்கும் அரசு வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு அதிக வாடகை கொடுக்கவில்லை என்றால் கடையை காலி செய்ய வேண்டும் எனக்கூறி ஒப்பந்தகாரர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே மன உளைச்சலில் மணிமேகலை தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.