மகனுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சாலை விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவறவிளை பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிளிண்டன்ஸ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 13-ஆம் தேதி கிளிண்டன்சுக்கு திருமணம் நடைபெறயிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று லாரன்ஸ் தனது மோட்டார் சைக்கிளில் திருவட்டாறு பகுதிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இவர் மாத்தார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு பேருந்து லாரன்ஸின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லாரன்சை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லாரன்ஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.