ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் சரக்கு வாகன டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து வாகனத்தில் இருந்த மற்றொரு நபரை பிடித்து சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் சுமார் 2,750 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதனைதொடர்ந்து அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் காமராஜ் புரத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பதும், தப்பியோடிய டிரைவர் புனவாசல் பகுதியை சேர்ந்த முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மேலச்சிறுபோது கிராமத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கோழி மற்றும் மாடு தீவனங்களுக்குகாக அதிக விலைக்கு விற்பனை செய்வது விசாரணையில் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். இதற்குப்பின் கைது செய்யப்பட்ட முனீஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில் தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்று ரேஷன் அரிசிகளை வீடு வீடாக சென்று வாங்கி அதனை கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.