டாக்டர் வீட்டில் திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் டாக்டரான ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆபிரகாம் ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது வீட்டில் உள்ள லாக்கரின் சாவியை காணவில்லை. மேலும் அதில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள், வைரம் மற்றும் பணத்தை மர்மநபர்கள் யாரோ லாக்கர் நம்பரை தெரிந்துகொண்டு திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆபிரகாம் வீட்டில் வேலை பார்க்கும் நபர்களை பிடித்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரகாம் வீட்டில் வேலைக்காரியாக இருந்த ஜெயசுதா, கார் டிரைவர் இர்வின் ஆகியோர் லாக்கரில் இருக்கும் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயசுதா மற்றும் இர்வின் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 42 பவுன் தங்க நகைகள், 2 வைர நகைகள் போன்றவற்றை மீட்டனர்.