மாடு மிதித்ததால் தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து செல்லும் பணியில் மாரிமுத்து உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது ஒரு மாடு மாரிமுத்துவின் மார்பு பகுதியில் மிதித்துவிட்டது. இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கோபமடைந்த உறவினர்கள் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் அம்பேத்கர் நகர் மெயின் ரோட்டில் திரண்டுவிட்டனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திருச்செந்தூர் ரோட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அனுபவம் இல்லாத பணியாளர்களை மாடு பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்த கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாரிமுத்துவின் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்திற்கு நிவாரண நிதி போன்றவை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.