சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள் என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் தங்களது உடைமைகளை கவனிக்காமல் இருந்தது பார்த்த செந்தில்குமார் அதிலிருந்த கைப்பை ஒன்றை தூக்கிக்கொண்டு நைசாக நழுவி இருக்கிறான்.
அந்த பையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் இருந்ததாக கூறப்படுகிறது. திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. உடனடியாக இந்த திருட்டு குறித்து கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கைப்பையில் இருந்து செல்போன் சிக்னலை வைத்து செந்தில் குமாரை பின்தொடர்ந்த தனிப்படை போலீசார் நெசப்பாக்கம் அருகே ஒரு கடையில் வைத்து அவனை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் கடந்த மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மொய் பணம் மற்றும் நகைகளை திருடியது, நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை திருடியது, பாண்டிபஜாரில் செல்போன் திருட்டு வழக்குகளில் செந்தில்குமார் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது .
இவை அனைத்துக்கும் மேலாக தனது மூன்றாவது மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல் துறையினரால் செந்தில்குமார் கைது செய்யப்பட்டவன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர் .திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரும் நபர்களின் திருடன் யார் நல்லவர் யார் யார் என தெரியவில்லை, கண்டறிவது சாத்தியமில்லை. எனவே அதுபோன்ற இடங்களில் விலை உயர்ந்த பொருட்களை உரிய பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர்