உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி பெண்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காக ‘சக்தி விதான்’ என்ற தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து நேற்று பிரியங்கா அதனை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெண்களை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இன்றைய பெண்கள் தங்களுக்காக போராட விரும்புகிறார்கள் என்பதற்காக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான தேர்தல் அறிக்கை சுயமரியாதை, தற்சார்பு, கல்வி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்று 6 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மேலும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு மற்றும் போலீஸ் துறையில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட 40 செய்த டிக்கெட் பெண்களுக்கு வழங்கப்படும் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். ஆனால் தற்போது இதை 50% உயர்த்தி உள்ளோம். அதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள் 50 % பெண்களை வேலைக்கு அமர்த்தினால் வரிவிலக்கு மற்றும் உதவி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் தொழில்முனைவோருக்கு கடன், வரி சலுகை போன்றவை வழங்கப்படும்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு மற்றும் 50% ரேஷன் கடைகளில் பெண்களைக் கொண்டு நடத்துதல் ஆகிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள், பட்டதாரி பெண்களுக்கு இருசக்கர வாகனம், பெண்களுக்காக 75 திறன் மேம்பாட்டு பள்ளிகள் மற்றும் பெண்களை மாலைநேரம் நடத்தும் கல்வி மையம் போன்ற திட்டங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.