Categories
தேசிய செய்திகள்

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்….. குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது… அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!!

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.. காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி அளவில் மேகம் சூழ்ந்து மோசமான வானிலை காரணமாக நடந்த இந்த விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என பலரும் இவர்களது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டனிலுள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..

இதற்கிடையே குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து பற்றி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது, சூலூரில் 11: 48 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டரின் தகவல்தொடர்பு மதியம் 12 :08 க்கு துண்டிக்கப்பட்டது. வெலிங்டனில் பிற்பகல் 12 : 15 மணிக்கு ஹெலிகாப்டர் தரை இறங்க இருந்த நிலையில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேர் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. விமானப்படைத் தளபதி சவுத்ரி நேற்றிரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார்.. விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்த்ரா சிங் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொள்ளும். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்படும் என்றார்..

 

Categories

Tech |