கனமழை எதிரொலியின் காரணமாக முருங்கைக்காய் விலை அதிகமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் 1 கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் வரத்து அதிகமானதால் மீண்டும் தக்காளி விலை 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று மற்ற காய்கறிகளின் விலையும் அதிகமாகியது.
ஈரோடு மாவட்டம் வ.உ.சி. நேதாஜி காய்கறி பெரிய மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிக அளவு வரத்தாகி வந்தது. கடந்த சில தினங்களாக கனமழை எதிரொலியாக வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விலை கடந்த வாரம் 1 கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேலும் அதிகரித்து முருங்கைக்காய் 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் மீண்டும் முருங்கைக்காய் விலை அதிகரித்து 1 கிலோ 250 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.