Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் மகள் இறப்பு குறித்து…. நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….!!

தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காளியம்மாளின் மூத்த மகள் சண்முகப்பிரியா இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சண்முகப்பிரியா, அவரது உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அருந்ததியர் சங்கம் என ஏராளமானோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாய், மகள் சாவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து சண்முகப்பிரியா மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனது தாய் காளியம்மாள் மற்றும் சகோதரி மணிமேகலை அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணம், நகைகள் ஆகியவை காணவில்லை.

எனவே கொள்ளையர்கள் யாரேனும் வந்துருக்கலாம் எனவும் சந்தேகமாக இருக்கிறது. ஆகவே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி ஜெயசிங் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் தாய் மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |