கன்னியாகுமரியில் நாளை 10/12/2021 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதால் பணி தேடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து அரசு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. வழக்கமாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். இதனிடையில் கொரோனா பாதிப்பால் அவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அரசு ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை 10/12/2021-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் நேரடியாக வந்து தகுதி உள்ளவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய இருக்கின்றனர். இதில் 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு கல்வித்தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு நாகர்கோவில் கோணம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.