தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் கிட்டத்தட்ட 54 நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தொற்று பாதித்த நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 21 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியுடைய ஒவ்வொருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வரும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்கெட் ஆகிய பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. .
ஏனெனில் உலக நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கிடையில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முககவசம் அணியாத தனி நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். எனவே இனிவரும் நாட்களில் வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதனை மக்கள் பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.