சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேகமாக ஓடிய 2 பேரை காவல்துறையினர் துரத்தி சென்று பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சுவால்பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பதும் மற்றும் மேட்டு குண்ணத்தூரை பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.