சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறு,குறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு தொழிற்சாலைகளை விடுவதற்கும், தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முக படுத்துவதற்கும் பல சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் இருக்கும் வேலூர் கிளை அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதனை அடுத்து இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றது. அதன்பின் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகின்றது. மேலும் இந்த வாய்ப்பினை ராணிப்பேட்டை மாவட்ட புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.