தேயிலை தோட்டத்தில் குட்டியானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தோணி முடி, முக்கோட்டு முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கெஜமுடி எஸ்டேட் 3-வது பிரிவு 43- ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் சோர்வாக நின்று கொண்டிருந்த ஒரு குட்டி யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த குட்டி யானை நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனரின் உத்தரவின்படி கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்துவிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 3 முதல் 5 வயதுடைய ஆண் குட்டி யானை ஆகும். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட குட்டியானை உணவு எதுவும் சாப்பிடாமல் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.