மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது கணவருடன் சென்றுள்ளார். இந்த பெண் தான் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த டீசல் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் மரப்பாலம் பகுதியில் வசிக்கும் முத்துமாரி என்பது தெரியவந்துள்ளது.
இவர் ரெடிமேடு சுற்றுசுவர் மற்றும் கழிப்பறை கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். அதே தொழில் செய்யும் ஒருவருக்கு முத்துமாரி 13 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர் முத்துமாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் முத்துமாரி தனது கணவருடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.