தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத கல்லூரி மாணவர்கள் இனி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
எனவே விடுதியில் உள்ள மாணவர்கள் நேரில் கலந்து கொள்ளாமல் 14 நாட்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம், கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடக்கும். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாத கல்லூரி மாணவர்களுக்கு இனி வகுப்புகளில் அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.