மினி எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய 3 மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். பொது வினியோகத் திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் நியாயவிலை கடைகளின் நிதி ஆதாரங்களை அதிகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்சு பாண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் ஆர்வமுள்ள மாநில அரசுகளுடன் சேர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்தத் திட்டத்திற்கு எரிபொருள் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
நியாயவிலைக் கடைகள் மூலம் நிதி சேவைகள் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக நிதி சேவை துறை அதிகாரி கூறினார். இந்த நிலையில், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் நியாய விலைக் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது.
மேலும் மக்களவையில் இந்த தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுதுறை இணை அமைச்சர் ராமேஸ்வர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இலக்கிடப்பட்ட பொதுவிநியோக முறை கட்டுப்பாட்டு ஆணை 2015-ன் கீழ், ரேஷன் கடைகளுக்கு உரிமங்கள் அளிக்கப்படுகின்றன. உணவுப்பொருள்கள் தவிர்த்த இதர பொருட்களை விற்கவும் இந்த கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.