மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூவேந்தர் தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் திருவளர்சோலை கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மூவேந்தரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மூவேந்தர் மற்றும் பாலமுருகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூவேந்தர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.