பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் இருந்து பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் செங்கோட்டையில் வசிக்கும் முகமது இஸ்மாயில் என்பவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் முகமது இஸ்மாயில் கைப்பையில் வைத்திருந்த 5 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மகேஸ்வரி என்பவரிடம் இருந்து 9,000 ரூபாய், செல்வி என்பவரிடமிருந்து 6000 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை காவல் னநிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை பரசுரம்பட்டி பகுதியில் வசிக்கும் அன்புச்செல்வி என்பது தெரியவந்துள்ளது. இந்த பெண் முகமது இஸ்மாயில் உட்பட மூன்று பேரிடம் பணத்தை திருடியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அன்புசெல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.