எல்லைப்பிரச்சினையில் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல வருடங்களாக எல்லைப்பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கையகப்படுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.
இதன் காரணமாக உக்ரைனுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து அளித்து வந்தது. இதற்கிடையில் சென்ற மாதம் ரஷ்யா 90,000 படை வீரர்களையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களையும் உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது.
இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற பயவுணர்வு எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி போர் தொடுக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் மீது அடுத்த ஆண்டு ஜனவரியில் போர் தொடுக்கலாம் என்று அமெரிக்கா புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இன்று உக்ரைன் நாட்டின் அதிபரான Volodymyr Zelenskyவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடலில் “எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்யா படைகள் விவகாரத்தில் உக்ரைனுக்கு முழு ஆதரவையும் நேட்டோ படைகள் அளிக்கும் என்று அமெரிக்கா அதிபர் உறுதியளித்துள்ளார்” என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா அதிபர் நேட்டோ படைகளின் உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் “கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஷ்யா அதிபருடன் உரையாற்றியது குறித்தும் உக்ரைனின் எல்லைப்பிரச்சினை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.