புலம்பெயர்வோரின் வரவினால் தான் ஜெர்மனியின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஜெர்மனியில் புலம்பெயர்தல் கடந்த 50 வருடங்களில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று Mediendienst Integration அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, வெளிநாட்டவர்கள் ஜெர்மனிக்கு புலம்பெயராமல் இருந்திருந்தால் அந்நாட்டின் மக்கள் தொகையானது 1950 மற்றும் 70க்கு இடைப்பட்ட காலங்களில் மட்டுமே அதிகரித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் குறைவான குழந்தை பிறப்பு விகிதம், முதுமையடைதல் போன்ற காரணங்களால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஜெர்மனியின் மக்கள் தொகையானது குறைந்துவிடும் என்று கூறியுள்ளனர். இருப்பினும் தற்பொழுது ஜெர்மனியில் மக்கள் தொகையானது சுமார் 83 மில்லியன் ஆகும். அதில் கால்வாசிக்கும் அதிகமானோர் புலம்பெயர்தலை பின்னணியாக கொண்டவர்கள் ஆவர்.
மேலும் அவர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்களும் அடங்குவர். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அதாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜெர்மனியில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையானது 1.8% மட்டுமே உயர்ந்துள்ளது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான வளர்ச்சி சதவீதம் என்று பெடரல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் நிபுணர்களின் கருத்துப்படி வருடமொன்றிற்கு பணிபுரியும் வயதிலுள்ள சுமார் 4,00,000 பேர் ஜெர்மனிக்கு தேவைப்படுகின்றனர். அப்பொழுது தான் பொறியியல், மருத்துவம் முதலான முக்கிய துறைகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியும். இதற்கு சாதகமாக தான் தற்பொழுதுள்ள புதிய அரசும் செயல்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.