ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி செல்லும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளால் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். அதில் பணம், தங்கம், வைரக்கற்கள் பதித்த நகைகள், கிரீடம், வாள் உள்ளிட்டவை அடங்கும். இந்தநிலையில், திருப்பதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தங்க கை கவசத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
அந்தத் தங்கக் கவசம் 5.3 கிலோ கிராம் எடை கொண்டது. அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் ஆகும். இந்த 2 கவசங்களும் காதி கஸ்தம் மற்றும் வரத ஹஸ்தம் என்று அழைக்கின்றனர். இந்த கை கவசங்களை திருமலையில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயலதிகாரி பெற்றுக்கொண்டார். இதைப்பற்றி நகைக்கடை உரிமையாளர் பேசுகையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.