மஹாராஷ்டிரா மாநிலமான புனே, மும்பை போன்ற மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தொற்று குறைந்து வந்ததை அடுத்து மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தினால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையில் நாசிக் முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “1 முதல் 7-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி சுமார் 60 சதவீத பெற்றோர்கள் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடர ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள 1,85,279 மாணவர்களுக்காக சுமார் 504 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிக்குச் செல்லும் 48 மணி நேரத்துக்கு முன், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்மறையான RTPCR அறிக்கையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் சான்றிதழ்களை சமர்பித்த பின்பு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளும் நேரடி வகுப்புகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் முன் பெற்றோரின் ஒப்புதலை பெற வேண்டும்.
மேலும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மும்பை, புனே உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இந்த பகுதியில் ஒமிக்ரான் பாதிப்பை கருத்தில் கொண்டு 1 முதல் 7-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் டிசம்பர் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. அதன்படி இப்பகுதியிலுள்ள 2,20,000 மாணவர்கள் டிச-15 முதல் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள உள்ளனர்.