இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது .
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 147 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலியா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்இழப்புக்கு 425 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் உட் 3 விக்கெட் கைப்பற்றினார் .
இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்னும் , ரோரி பர்ன்ஸ் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதன் பிறகு கேப்டன் ஜோ ரூட் – டேவிட் மலான் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 220 ரன்கள் எடுத்திருந்தது . இதையடுத்து 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மலான் (82), ஜோ ரூட்(89) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர் .இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்கள் இழந்தனர்.
இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது . இதில் ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 20 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இறுதியாக 5.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி அடிலெய்டில் நடைபெறுகிறது.