ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிறுமுகையில் ராமகிருஷ்ணன்-சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யோகேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இவருடன் லிஜு என்ற மாணவரும் பயின்று வருகிறார். இந்நிலையில் யோகேஷ், லிஜு ஆகிய இருவரும் அதே வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களுடன் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணை பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.
இந்நிலையில் கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் 6 பேரும் அங்கிருந்து மீன் மார்க்கெட் அருகில் உள்ள பவானி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு ஆற்றில் இறங்கி 6 பேரும் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் யோகேஷ் மற்றும் லிஜு இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் யோகேஷ் ஆற்று தண்ணீரில் மூழ்கிவிட்டார். மேலும் லிஜு தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மற்ற மாணவர்கள் 4 பேரும் உடனடியாக நீந்திச் சென்று 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மாணவர்களுக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனிடையில் லிஜு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.